வரலாறு
கீழத்தெரு மாரியம்மன் வரலாறு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது இந்த அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் திருக்கோவில்.
இவ்வூருக்கு பெரும்பற்றப்புலியூர் மற்றும் தில்லை என்ற பெயர்களும் முன் காலத்தில் இருந்தது உண்டு. பிற்காலத்தில் சிதம்பரம் என்ற பெயர் வந்தது. சிதம்பரம் என்ற பெயர் வரக்காரணம் என்னவென்றால் ‘சித்’ என்றால் ஞானம், ‘அம்பரம்’ என்றால் ஆகாயம். சித் + அம்பரம் = ‘சிதம்பரம்’. இறைவன் ஞான வடிவில் ஆகாயம் எங்கும் பரவிக்கிடக்கிறான் என்று பொருள். ஆகவே பஞ்ச பூத தளங்களில் ஆகாய தலமாக சிறப்பு வாய்ந்த தலமாக சிதம்பரம் விளங்குகிறது.
சோழ தேசத்தின் தில்லையம்பதிப் பகுதி, மிக முக்கியமான இடமாக கருதப்பட்டது. ஏனெனில் மேற்கு பகுதியான வீராணம் ஏரி வழியாகவும், தென்கிழக்கு பகுதியான பூம்புகார் மற்றும் நாகப்பட்டின கடற்கரை வழியாகவும் எதிரி படையினர் வந்து எந்த நேரமும் தாக்கக்கூடும் என்பதால், தில்லையம்பதி எனப்படும் சிதம்பரத்தில், வழக்கத்தைவிட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அகிலமெல்லாம் காத்திடும் அன்னையே!
ஆதிபராசக்தியான தேவியே!
இன்பமான வாழ்வு தரும் தேவியே!
எங்களையெல்லாம் காத்திடுவாய்!
கீழத்தெரு மாரியே!
குதிரை வீரர்களும், யானைப்படையினரும், அம்பு விடுவதில் சூரர்கள் என திகழ்ந்தவர்களும், வேவு பார்ப்பவர்களும், வாள் வீச்சில் திறன் கொண்டவர்களும் மக்களோடு மக்களாக இருந்து எதிரி தேசத்திலிருந்து ஒரு துரும்பு கூட சோழ தேசத்திற்குள் நுழைய விடாமல் பாதுகாத்தனர். இத்தனை பாதுகாப்பு இருந்தும் செய்வினை வைத்தும், பில்லி சூனியங்களை ஏவி விட்டும் சோழ தேசத்தின் வளத்தையும் பலத்தையும் குலைத்துப்போடுவதில் சேர தேசமும், சிங்கள தேசமும் குறியாக இருந்தது. இவற்றை ஒற்றர்கள் கொண்டு அறிந்து கொண்ட சோழ அரசு என்ன செய்யலாம் என யோசித்தது.
சோழ நாட்டின் தலைநகரான தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோயிலிலும், சிதம்பரம் ஸ்ரீ நடராஜப்பெருமான் கோயிலிலும் விஷேச யாகங்கள் செய்யப்பட்டன. பூஜையின் நிறைவில், சிதம்பரம் என இன்றைக்கு அழைக்கப்படும் தில்லையம்பதி நகரத்தைச்சுற்றி நாலாதிசையிலும் மிகவும் சக்தி வாய்ந்த, பில்லி சூனியங்களையும் , காத்து கருப்புகளையும் அடித்து துரத்துகிற சக்திகளை, தேவியருக்குள் இறக்கி, விக்கிரகங்கள் அமைத்துப் பிரதிஷ்டை செய்தால், தில்லையம்பதி வழியே எதிரி தேசத்தின் காற்றுகூட, சோழ தேசத்திற்குள் புகமுடியாது என சொல்லப்பட்டது.
அதன்படி தில்லையம்பதியின் நான்கு எல்லைகளிலும் நான்கு தேவியரின் விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தேவியரின் திருமேனிகளை பூக்களால் அலங்கரித்து, ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பொங்கல் படையலிட்டனர்.
இந்த ஊருக்குள் இருந்தபடி காவல் காக்கிற வீரர்களுக்கு எந்தநோயும் வராம நீதாம்மா பாத்துக்கணும், அவங்களோட கண்களில் பார்வை கூர்மையைக் கொடுத்து, கைகளுக்கும், கால்களுக்கும் தெம்பை கொடுத்து, தோள்களுக்கு வலுவை தந்து, அவர்களுக்கு உடல் சோர்வு எதுவும் வராம, சாப்பிடுற உணவெல்லாம் சத்தானதா மாற, நீதாம்மா அருள்புரியனும் என வேண்டிக்கொண்டனர்.
தில்லையம்பதியின் வடக்குப்பகுதியில் ஸ்ரீ தில்லை அம்மனும், தெற்கு பகுதியில் ஸ்ரீ வெள்ளந்தாங்கி அம்மனும், மேற்கு பகுதியில் ஸ்ரீ எல்லை அம்மனும், கிழக்கு பகுதியில் ஸ்ரீ மாரியம்மனும் இந்நகரை அருள்பாளிக்கின்றார்கள். அன்று துவங்கி தில்லையம்பதியின் நான்கு எல்லைகளிலும் குடியிருந்து இன்றளவும் சோழ தேசத்தை மட்டுமின்றி, மொத்த உலகையும் காத்தருளுகின்றனர் இந்த நான்கு சக்தி தேவியர்களும் .
இவர்களில் ஸ்ரீ மாரியம்மன் கிழக்கு திசையில் அமர்ந்து அருள்பாலிப்பதாலும், கீழத்தெருவில் கோயில் கொண்டிருப்பதாலும் இந்த தேவிக்கு அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் எனப்பெயர் பெற்று விளங்கிவருகிறது. மேலும் இந்த அம்மன் சிறப்பு வாய்ந்த சக்தியாக பிரார்த்தனை தலமாக கீழத்தெரு மாரியம்மன் திருக்கோவில் திகழ்கிறது.
திருக்கோவில் அம்சம்
பல கோயில்களில் அம்பாள் சன்னதியில் எதிர்புறத்தில் சிங்க விக்ரகம், சூலம், மற்றும் கழுமரம் இருக்கும். ஆனால் இங்கே கீழத்தெரு மாரியம்மனுக்கு முன்னே நந்தி அமைந்துள்ளது. ஆக சிவ-சக்தி தலம் எனப்போற்றுகின்றனர்.
கருவறையில் கிழக்கு பார்த்தபடி அமர்ந்து,வலது கைகளில் கத்தி-உடுக்கை மற்றும் பாம்பு, இடது கைகளில் சூலம் மற்றும் மண்டை ஓடு ஆகியவற்றை ஏந்தி ,திருபாதத்தின் கீழே அரக்கனின் தலையை மிதித்தப்படி அருட்பார்வையுடன் காட்சி தரும். மற்றுமொரு அம்சமாக அம்பாளின் இரு மடியிலும் சர்பம் படமெடுத்து காட்சி தருவது சிறப்பு விசேஷமாகும்.
பேச்சியம்மன், துர்க்கையம்மன், நவக்கிரகம், காத்தவராயன்-ஆரியமாலா, ஐயப்பன், நாகக்கன்னியம்மன் ஆகியவர்களுக்கு தனித்தனி சன்னதிகள் உண்டு, மேலும் கோவில் உள்ளே விநாயகர்,சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், காளியம்மன், பைரவர் போன்ற பல பரிவார மூர்த்திகளும் இருக்கிறது.
சிதம்பரம் தில்லையம்பலத்தானை தரிசிக்க வரும்போது, அருகில் இருக்கும் கீழத்தெரு மாரியம்மனையும் தரிசித்து, உங்களின் மனக்குறையை அவளிடம் தெரிவியுங்கள். கேட்டவர்ககளுக்கெல்லாம் கேட்ட வரம் தந்தருளும், சோழ தேசத்தையே காத்தருளிய கருணை தெய்வமாம் மாரியம்மன், உங்கள் குடும்பத்தையும் காப்பாள். இந்த அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன்.